பூத்திருந்த காலம்

அன்றைய அந்திப்பொழுது
வீடு திரும்புதல்களில்
படிந்திருக்கும் அழுக்கு
புறத்தில் மட்டும்

விளையாட்டில் விட்டுக்கொண்ட
காய் எப்படியும்
பழுத்துவிடும் மறுநாள்

தூக்கிச் சொருகிய சேலையோடு
குளத்தில் வெளுத்த சலவைக்காரியின்
வெண் தொடைகளை விகல்பமின்றி பார்த்தது
சிறுநீரில் உயிரணுக்கள் கலவாத காலத்தில்

உள்ளம் போகும் தடத்தில்
உதைபந்தென இருந்த நாவு
இன்று சொற்களை தேர்கிறது
திறமையானதொரு சதுரங்க
ஆட்டக்காரனின் காய் நகர்த்தலாய்

பகிர்தலையும் புன்னகையையும்
புதைத்த இடத்தில்
மீந்த எலும்புத்துண்டுகளாய்
அவரவர் பால்யம்

- தூரன் குணா (நன்றி: கணையாழி, 2003)