நேற்று யதேச்சையாக சமையல் அறையில் நுழைந்த போது அங்குள்ள பொருட்களை நோட்டமிட்டேன். எவ்வளவு சொகுசாக நாம் வீட்டில் சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பார்க்கும் போது ஈழ மக்களின் இடம் பெயரும் காட்சி கண்களில் இரத்தம் வரவழைக்கிறது.
எல்லாவற்றையும் இழந்து எந்த ஒன்றின் உந்துதலால், இடைவிடாத போராட்டத்தை இவர்கள் நடத்துகிறார்கள். உலகம் முழுதும் தடை, உணவு இல்லை, மருந்து இல்லை. எனினும் இயக்கம் தான் எல்லாம் இறுதி இலட்சியம் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறுகிறார்கள்.
பலர் பிரபாகரனை ஆதரிக்கிறார்கள் அதேபோல் எதிர்ப்பவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். முழுக்க எதிரிகளால் சூழப்பட்ட அந்த மனிதனின் எண்ண ஓட்டம் எண்ணவாக இருக்கும் இந்த கணத்தில். எண்னிப் பார்க்க பார்க்க இரவு தூக்கம் வர நெடு நேரமாகிறது.
மாலையில் பார்க்கில் ஜோடி ஜோடியாக இருப்பவர்களை பார்த்துக் கொண்டே வாக்கிங் சென்றபோது ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை எறிகணையாய் நெஞ்சில் பாய்கிறது.
ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு
குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு
பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது
இளையவருக்கு விதித்தவன் யாரோ?
யார்?
Labels: கட்டுரைகள்