நினைவுக் காம்புகள்

முன்பனிக்காலத்தின்
பின்னிரவின் போது
உறங்கவிடாமல்

எங்கோ ஓர்
இடுக்கிலிருந்து

இரையும்
சுவர்க்கோழி போல்
இம்சிக்கிறது உன் நினைவு


கொத்தி கொத்திப்

பூச்சியுண்ணும்
மரம் கொத்தியைப் போலென்
மனம் கொத்தித் தின்னும்
காதற் பறவையாய் நீ!

நீ கிளறிய இரத்த பள்ளங்களில்
நீந்திக் களிக்கின்றன்
நீ உதிர்த்த கொடுஞ்சொற்கள்.

பசேலென பூத்த மனப்
பிரபஞ்ச வெளியில்

முழுவதுமாய் அமில மழையைப்
பொழிந்து விட்டுப்
போயிருக்கிறாய்

இத்தனைக்குப்

பிறகும் கூட
ஏனோ தெரியவில்லை...?

பிறந்ததும்

இமை திறவாமலேயே
தாயின் முலைக்காம்பை உணர்ந்து
கவ்வும் பச்சிளங் குழந்தை போல்
சுயமிழந்த வேளைகளில் கூட
உன் நினைவுக் காம்புகளில் தான்
உயிர் பருகிக்

கொண்டிருக்கிறேன்


-- தாமரை பாரதி---