காலம்

ஓடை நீரில் மீன்கள் பின்னால்
ஓடித் திரிந்தது ஒரு காலம்
கோடை மணலில் கால்கள் வெந்து
குழைந்து போனதும் ஒரு காலம்

ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே
இதயம் கரைந்தது ஒரு காலம்
பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு
புத்தகமானதும் ஒரு காலம்

சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்
துள்ளித் திரிந்தது ஒரு காலம்
எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்
எட்டித் தள்ளுவ தொருகாலம்

ஆகாயத்தைத் தொட்டுப் பிடிக்கும்
ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்
ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளே
அழைத்துக் கொண்டதும் ஒரு காலம்

பணந்தான் உந்தன் எஜமான் என்று
பதறித் திரிந்தது ஒரு காலம்
பணந்தான் உந்தன் சேவகன் என்று
பாடங் கண்டதும் ஒரு காலம்

அதுவோ இதுவோ எதுவோ என்றே
ஆசை வளர்த்ததும் ஒரு காலம்
இதற்குத் தானா இவ்வளவென்றே
இடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்

காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்

சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்
தொப்பை வளர்த்ததும் ஒரு காலம்
மில்லிகிராமில் உணவை அளந்து
மென்று முடிப்பதும் ஒரு காலம்

தன்னை வெல்ல ஆளில்லை என்றே
தருக்கித் திரிவதும் ஒரு காலம்
சின்னக் குழாயில் காற்றைச் செலுத்தி
ஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்

பூமி தனக்கே சொந்தம் என்று
புலம்பித் திரிவதும் ஒரு காலம்
பூமிக்கே நீ சொந்தம் என்று
புரிந்து தெளிவதும் ஒரு காலம்


-வைரமுத்து