அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
மனிதர்களை இரைச்சலுக்குள் புதைத்துவைத்திருக்கும்
இக்கொடும்நகரில்
சிறுதெருவின் முனையொன்றில்
பேரானந்தப் பெருவாழ்வு சுகிப்பவளாய்
புன்னகைத்து நடந்தபடியிருக்கும்
அக்கிறுக்கிதான் விதைத்திருக்கவேண்டும்
எனக்குள்ளும் அப்படியான ஆசையை
பேருந்து நிறுத்தம் அவள் படுக்கையறை
கைப்பைசுமந்தோடும் காரியதரிசிகளும்
நகரும் வாகனங்களின் அலறும் ஒலிப்பான்களும்
ஒன்றும் செய்யமுடியாத அவள் தூக்கத்தை
புத்தகப்பையுடன் கட்டப்பட்ட சிணுங்கும்சிறுவன்
கடக்கும் சிறுநொடியில் கலைத்துவிட்டுப்போகிறான்
அவன் அழுகுரல் கேட்டுணரும்
கிறுக்கியின் காதுகள் கூர்மையானவை
சாக்கடை அவள் ஓய்வறை
முடப்பட்ட நாற்றங்களாய்
ஒளித்துவைத்துக்கொண்ட மனங்களை
சுமந்துதிரியும் மானுடரோடொப்பிடுகையில்
இத்திறந்த சாக்கடை
பெரும்நாற்றமில்லையெனச் சிரித்திருக்கிறாள்
கிறுக்கியின் நாசிகள் பலமானவை
சிரிப்பதற்கு அவள் சலிப்பதில்லை
வீட்டிற்கு வருவோரை
'வீதிமுனையில் பைத்தியம் இருக்கிறது
பார்த்துப்போங்கள்' என தவறாது சொல்லும்
வைரமூக்குத்திக்காரி வழியில் பட்டாலும்
தலையாட்டிச் சிரிக்கிறாள் கிறுக்கி
அவளுக்கு யாருடனும் உடன்பாடில்லாததைப்போல்
முரண்பாடுகளுமில்லை
கிறுக்கி ஒரு ஞானி
அவளுக்கும் உண்டு நண்பர்கள்
பக்கத்துப் பள்ளிக்கூடத்தின்
மீந்த சத்துணவு கிறுக்கியின் வட்டலில்
அதையும் பங்கிட்டுக்கொள்கிறாள்
எசமானர்கள் இல்லாத
எலும்புதுருத்திய நாய்களுக்கும்
கூரைமேல் புதுப்படையல் வாய்க்காத
இறக்கை இளைத்த காக்கைகளுக்கும்
கிறுக்கி ஒரு உயிர்நேசி
அவளுக்கென உண்டு ஒரு மொழி
சாம்பலைக்கிளறி கரித்துண்டுகளெடுத்துவந்து
அதட்டும் குரல்களற்ற ஆதரவான நாட்களில்
தெருவோரச் சுவரொன்றில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் கிறுக்கி
வாழ்வு ஒரு சமுத்திரம் என்றோ
அது ஒரு காட்டாறு என்றோ
அல்லது அது ஒரு பனித்துளி என்றோ
எழுதியிருக்கலாம் அவள்
அதற்கான காரணங்களையும் சேர்த்து
பைத்தியம் கிறுக்கியிருக்கிறதென
மனிதர் சுண்ணாம்புகொண்டு அழிப்பதற்குமுன்
அவசரமாய்ப் படித்துக்கொண்டிருக்கின்றன
நிலவும் நட்சத்திரங்களும்
இரவில் நெடுநேரம் கண்விழித்து
யார் கண்டது
அவற்றின் நாளைய ஒளியில்
கிறுக்கியின் மொழி கசிந்தாலும் கசியும்.
-செல்வநாயகி " நிறங்கள்"
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
Labels: கவிதைகள்