தமிழ் நதி

தமிழ் நதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் பயின்றவர். தற்சமயம் கனடாவில் வசித்து வருகிறார். புலம் பெயர்தல் உணர்வுகளை எழுத்தாக்கியிருக்கிறார்...

இவருடைய எழுத்திலிருந்து சில துளிகள்....

இரத்தத்தாலும் கண்ணீராலும் மெழுகப்பட்ட ஏ9 இல் விரைகிறோம். காட்டு மரங்களும் ‘கண்ணிவெடி கவனம்’ என அச்சுறுத்தும் அறிவுறுத்தல்களும் பாதையின் இருமருங்கும் கழிகின்றன. எழுத நினைப்பவரை வார்த்தைகள் கைவிடும்- வலியும் மகிழ்வும் நெகிழ்வும் பெருமிதமும் தரும் ஆனையிறவின் உப்பளக்காற்று ஓராயிரம் கதைபேசுகிறது. தலையறுந்த தென்னை, பனைகள் பரிதாபமாக நிற்கின்றன.
மேலும் தொடர ..... http://tamilnathy.blogspot.com/2006/09/blog-post_16.html

பரவாயில்லை

பசியில் சுருண்ட ஒரு மனிதனின்
கடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன
வல்லூறுகள்

வன்புணரப்பட்ட சிறுமியின்
கால் வழி பெருக்கெடுக்கும் குருதியை
இரகசியமாகத் துடைத்துக்கொண்டிருக்கிறாள்
எங்கோ ஓர் தாய்

காதலனின் மார்பு மயிரளைந்தபடி
கணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்
தொலைபேசியில் ஒருத்தி

வீடு திரும்பச்சொல்லி இறைஞ்சும்
முதிய தாயின் நெஞ்சில் கால்பதித்து
சாக்கடையில் தள்ளுகிறான்
ஒரு குடிகாரன்

பனங்கூடல்களுக்கிடையிலிருந்து
ஒலி்த்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் கண்திறக்காத பூனைக்குட்டிகள்
கத்தியலையும் சத்தம்

பாரவண்டிச் சாரதியிடம் திருட்டுக்கொடுத்த
அம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுநிசி மல்லிகைப் பூக்காரியொருத்தி

இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!

- தமிழ் நதி