துரோகத்தின் நெடியினால் இரவையும்
வேஷத்தின் பூச்சுகொண்டு பகலையும்
அறிந்து கொள்வதாக சுவர்ப் பல்லிகள்
சொல்லி வந்தன.
வெகு நாட்கள் புரிபடாதிருந்த
அந்திப் பொழுதின் சூட்சமம் மட்டும்,
பிச்சை மறுக்கப்பட்ட
ஓர் அலுமினிய தட்டின்
வெற்றோசையால் நேற்று மாலைதான்
சட்டென்று பிடிபட்டதாம் அவற்றுக்கு.
குடியிருப்பில்
அவரவர் கதவு இலக்கம்,
அவரவர் மின் கட்டண பெட்டி
அவரவர் வண்டி நிறுத்துமிடம்
அவரவர் பால் தபால் பைகள்
எல்லமும் பிரித்தாயிற்று.
திடீரென அடைத்துக் கொள்ள,
எப்படி பிரிக்க, அவரவர் சாக்கடையை?
அடுத்த வீட்டுக்குள் குலை தள்ளிவிடுமோ
என்கின்ற பதட்டத்துடன் வளர்க்கப்படும்
என் வீட்டு வாழையால் எப்படி தர இயலும்
என்றாவது இழைப்பாற வரும்
ஒரு நாடோடிக்கான
உணவு பரிமாறப்படும்
அகண்ட பச்சை இலையை?
ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை
எடுத்து உண்ட எத்தியோப்பியக்
குழந்தைகளின் பட்டினியைத்
தொலைக்காட்சியில் பார்த்த பின்பும்,
கலவி இன்பம் துய்த்த
அந்த இரவுக்கு பின்தான்
முற்றிலும் கடைந்தெடுத்த
நகர வாசியானேன் நான்.
--தமிழச்சி " நன்றி : ஆனந்த விகடன்"