1. மரபில் எழுதியிருந்தால் பெரும்பாலும் நீக்கி விடலாம். சீர், தளை என்று கட்டாயாப்படுத்தும் போது கவிதானுபவம் பாதிக்கப்படுகிறது. பாசாங்கு வந்து விடுகிறது.
2. 'ஓ', 'அட', 'என்னே' போன்ற வார்த்தைகள் இருப்பின் தூக்கி எறியவும்.
3.இயற்கை வர்ணனை, நிலா, சூரியோதயம்,வானத்தின் வர்ண ஜாலங்கள் இவைகளை வர்ணித்தால் கவிதைகள் அல்ல...அதுவும் நட்சத்திர இரவை பாட்டாளி வேர்வை, பொத்தல் சட்டை என்றெல்லாம் பாடும் கவிதைகளை தடை செய்ய மனுப் போட்டிருக்கிறேன்.
4.நல்ல கவிதை என்பது குறிஞ்சி மலர் போல ரொம்ப அரிதான விஷயம்.கவிதை உங்களை பாதிக்க வேண்டும். உங்கள் இதயத்துடிப்பு ஒன்றாவது மிஸ்ஸாகும் அல்லது கவிஞனை நான் நினைத்ததை சொல்லிட்டான்யா என்று வியக்க வைக்கும்.
5.பொங்கல் வாழ்த்து, தேவி மகாத்மியம், நையாண்டி, சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தது போன்ற தினப்படி விஷயங்களை சொல்வதெல்லம் கவிதை அல்ல.
6.நல்ல கவிதைக்கு மொழி கிடையாது, காலம் கிடையாது. ஆத்மாநாம் கவிதைகள், அவர் இறந்த பிறகும் என்னை பாதிக்கின்றன். அதேபோல் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என சுருக்கமாக சொன்ன கணியன் பூங்குன்றனார்." "Our words knew each other. That was enogh" என எரிக்கா ஜாங் என்கிற அமெரிக்க கவிதாயினி, பாப்லோ நெருடாவை பற்றி சொல்கிறார்.கவிஞன் தனக்கு கிடைத்த உன்னத கணத்தை உங்களுக்கு அளிக்கிறான். பாசாங்கு என்பதே இருக்காது.
7. நல்ல கவிதைகள் என்று நான் சொன்னதை நம்பாதீர்கள். உங்களுக்கே பிடிப்பான கவிதைகளை நீங்கள் தான் இனம் பிரிக்க வேண்டும். "What the imagination seizes as beauty must be truth" என்று கீட்ஸ் சொல்லும் உண்மை.
8. நாட்டுப் பாடல்கள் பலவற்றில் கவிதை உண்டு. ரொம்ப போலித்தனமும் உண்டு. காரணம் சினிமா. ' தண்ணி கறுத்திருச்சு' என்கிற ஒரு வரி தான் நாட்டுப் பாடல் மற்றெதெல்லாம் நோட்டுப் பாடல்.
9. புத்திசாலித்தனமான வரிகளை கவிதை என்று என்று குழப்பாதீர்கள். 'நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை' என்பதெல்லாம் புத்திசாலித்தனமான வரிகள்.
10. நல்ல கவிதை எழுத உங்களுக்கு யோசனை இருந்தால் முதலில் நல்ல கவிதையை படித்துப் பாருங்கள். நீங்கள் சொல்ல வந்ததை மற்றொரு பட்சி சிறப்பாகவே சொல்லியிருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆகவே யோசனையை கைவிடுவது பெரும்பாலும் உத்தமம்.
கீழ்க்காணும் கவிதை என்னைக் கவர்ந்தது. உங்களை ?
"வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைகலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்...
திறந்து வைத்த கற்பூரம்போல
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது...
இனி ஆயத்தங்களை தின்று சாகும் என் முதுமை...
பின்னும் உயிர் வாழும் கானல்..."
காலச்சுவடு ஜூலை 1989 இதழில் பசுவய்யாவின் இந்த கவிதையில் சொல்லப்படும் வேட்டையும் வித்தைகளும் என்ன என்று யோசித்து பாருங்கள். குட்லக்.
-சுஜாதா, இந்தியா டுடே, ஜனவரி 1990
நல்ல கவிதையை அடையாளம் காண 10 வழிகள்
Labels: கட்டுரைகள்