ஞாபகங்கள்

என் ஞாபகம் படித்ததைக் கலைத்ததென்று
பாதித் தேர்வில் ஓடி வந்தாய்

கதகதப்பாய் கைக்குள் அடங்கி,
மெளனமாய் அழுதாய்

உன்
முன்னுச்சிவகிட்டில் பரிவாய் நீவி,
சரிடா... போகட்டுண்டா என்று சொன்னேன்.

அன்றைக்குத்தான் சேர்ந்து நனைந்தோம்,
முதமுதலாய் மழையில்

சரக் சரக்கென ஈரப்பாவாடை நடை தடுக்க
கோயிலிலிருந்து ரயிலடி வந்தோம்

நனைந்து வெளிறிய முகமோ,
சந்தன காப்பிட்ட அம்மன் முகம்

ஒரு சிகரட் குடித்தால் தேவலை குளிருக்கு.. என்றதும்
பொய்யாய் அறைந்தாய்..

முந்தானை எடுத்து என் தலைதுவட்ட,
பொசுக்கென்ற தும்மலில் அதிர்ந்து
போனாய்...
சூடு பரவ உள்ளங்கை தேய்த்து
கன்னத்தில் வைத்தாய்

இப்படி ஈரமாய் வீட்டுக்கு போனால்
அடிதான் விழுமென்றாய்...

இடிக்கு பயந்து கட்டிப்பிடித்தாய்

மின்னலுக்கு கண்மூடி
தோளில் சாய்ந்தாய்...

பாவாடை பிழிந்தபோது
கால் பார்த்த என்னை
மார்பில் குத்தினாய்

இன்றைக்கும் மழைதான்
காட்சிகளின் சாரல் மனசை நனைக்க...


----ரவி சுப்பிரமணியன் --