மறுபடியும்
என் மனக்கதவு தட்டப்படும் ஓசை
தட்டுவது மரணமா?
இல்லை...
ஜனனமா?
காலத்தின் செய்தியைக்
கைகளிலேந்தி வந்திருக்கிறாய்
சரி, நீ இலையுதிர் காலமா?
இல்லை...
வசந்த காலமா?
சூரியச்சுடர்
உன் முகத்தில் ஒளிர்கிறது
என் தயக்கம்..
நீ கிழக்கின் உதயமா?
இல்லை...
மேற்கின் அஸ்தமனமா?
ராகத்தின் ஓசைகளை
நீ இசைக்கிறாய்
நான் யோசிக்கிறேன்
இந்த ராகம்
நீலாம்பரியா?
இல்லை...
முகாரியா?
தனிமைக் குகையின்
தாப இருளுக்குள்
நான் படுத்திருக்கிறேன்
தீப்பந்ததோடு
நீ வருகிறாய்
நான் தவிக்கிறேன்
இது திசை காட்டவா?
இல்லை ...
சிதை மூட்டவா?
- இலக்கியா நடராஜன், சென்னை
நீ வருகிறாய்...
Labels: கவிதைகள்