அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்

கருப்புப் போர்வைக்குள்
குளிர் உறங்கும்
இரவு.


அமெரிக்காவின்
அகன்ற சாலைகளெங்கும்
கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது
கனத்த காற்று.


ஜன்னல் திறந்தால்
பாய்ந்து விடலாமென்று
குத்தூசிகளுடன் காத்திருக்கிறது
குளிர்.


செயற்கைச் சூரியனை
குழாய்களில் செலுத்தும்
வீடுகள்.


விரல்கள்
அனிச்சைச் செயலாய்
நடுங்க.


பல் வரிசை இரண்டும்
காலாட்படை போல
நேருக்கு நேர் மோதிக் கொள்ள.
நாக்கு தொண்டைக்குள் சென்று
நங்கூரமிடும் இரவு.


மெலிதாய்க் கசியும் நிலவில்
சாலைகளுக்கு இலையாடை போர்த்தி
நிர்வாணமாய் நிற்கும்
பனி தாங்கி மரங்கள்.


சிகரெட் இழுக்காமலேயே
புகைவிடும் வாயுடன்,
அணுக்களிலும் இடையிலும் வெப்பத்தோடு
பகையிடும் குளிர்ந்த இரவில்,
அந்த ஒற்றையடிப்பாதையில்
நான்.


உடலின் உறுப்புக்களைக்
கொஞ்சம் கொஞ்சமாய்க்
குளிர் தின்ன.


நெஞ்சில் மட்டும் கதகதப்பாய்
இன்னும்
உயிர்வளர்க்கும் உன் நினைவுகள்..


--"ஒரு மழை இரவும், ஓராயிரம் ஈசல்களும் நூலில் இருந்து"