முன்குறிப்பு :
Labels: கவிதைகள்
வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு
கிளிநொச்சி அகிலனின் வலைதளத்தை நண்பர் செந்தில்நாதன் எனக்கு பரிந்துரைத்திருந்தார். என் சிறு வயதில் மின்சாரம் இல்லாத இரவுகளில் எங்கள் வீட்டின் ஓட்டு விரிசல்களின் வழியாக தெரியும் நிலவின் அழகை தூக்கம் வரும் வரை பார்த்துக்கொண்டே இருப்பேன். இன்று மாநகரத்தில் நிலவை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இது தொடர்பான அகிலனின் கவிதையில் ஒன்று........ (அவர் இது கவிதையா என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். சந்தேகம் இல்லை அகிலன், கவிதைக்கான பத்து விதிகளையும் இது பூர்த்தி செய்கிறது.)
கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய ஜன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..
மேலும் தொடர .... http://www.agiilan.com/?p=329
Labels: கவிதைகள்
சிநேகிதிகளின் கணவர்கள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
- மனுஷ்யபுத்திரன்
நன்றி : செந்தில் நாதன், பெங்களூர்.
Labels: கவிதைகள்
எதுவும் புரியவில்லை...
சொல்லப்பட்ட மந்திரகோஷங்கள்
எதுவும் புரியவில்லை
ஓரமாய் அமர்ந்து தன் சுய ரசிப்ப்புக்குட்பட்டு
வாசித்துகொண்டிருக்கும் மேளதாளங்களும்
ரசிக்கவாய்க்கவில்லை
பட்டுப்புடவைகள் சர சரக்க வந்து
தெரியுமாவெனக்கேட்டு திகைக்க வைக்கும்
முன்பின் நானறியா உறவுகளும்
ரகசியமாய் சிரித்துப்போகும்
நண்பர்களும் அதிர்வாயிருக்கிறது
எல்லாம் முடிந்து உறவுகளோடு மாறிமாறி
எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
ஓரமாய் வந்தமர்ந்த குழந்தை என்ன உறவென்பது
இன்னமும் புரியவில்லை
கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய மனைவியின் நண்பர்கள்
முகம் மனதில் பதியவில்லை
எனக்கு உணவு பரிமாறும் நண்பர் சாப்பிட்டிருப்பாரா
தெரியவில்லை
அந்த மேளகோஷ்டி சாப்பிட்டிருக்குமா?
இத்தனைக்குப்பிறகும் இத்திருமணம் யாருக்கேணும்
வருத்தமளிக்குமா?
வந்த எல்லோரும் நேரத்திற்கு
ஊர்போய் சேர்ந்திருப்பார்களா?
கேள்விகளோடே முடிந்தது என் திருமணமும்
நான் கலந்துகொண்ட திருமணங்களும்..
-- ரிஷி சேது - rishi_sethu23@rediffmail.com
Labels: கவிதைகள்
என் மனமும் அதனோடே...
தீட்டுக்கு ஒதுங்குவதில்லை
என் வீட்டில் குடியிருக்கும்
சிட்டுக்குருவிகள்...
வண்ணத்துப் பூச்சிகளின்
இறக்கைகளுக்குள் குடியேறிவிடுகிறது
அவ்வப்போது மனது...
என்ன தைரியம்
மின் கம்பியில் வரிசையாய் அமர்ந்திருக்கும்
சிறு பறவைகள்...
வீரியமழைக்கு ஒரு பாடல்
மென் தூரலுக்கொரு பாடல்
குளிர் காற்றுக்கென்றொன்றாய்
விதவிதமாய் வெளியெங்கும்
நிறைத்துப்போகும் வெண் நாரைகளுக்கு
ராகங்கள் சுரங்கள் கட்டுப்படுகின்றன...
கொட்டிக்கிடக்கும் இலைச்சருகுகளுக்கிடையே
ஊர்ந்துபோகும் நீள் பாம்பிற்கு
இரையாகிவிடலாமென்ற எச்சரிக்கையோடே
பதுங்குகிறது வெள்ளெலி ..
என் மனமும் அதனோடே...
-- ரிஷி சேது - rishi_sethu23@rediffmail.com
Labels: கவிதைகள்
ரத்தத்தின் சுவை
போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்
என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல
அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்
அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது
யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்
நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்
மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்
சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்
மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்
தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை
போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்
குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை
இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்
இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை
(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)
இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....
Labels: கவிதைகள்
மன நல மருத்துவர் முன் நான்..
அழைத்து வந்தவர்கள் சொன்னதோ
ஆயிரம் காரணங்கள்
பிச்சைக்காரனுக்கு ஐம்பது ரூபாய்
போட்டதைச் சொன்னார் ஒருவர்
நாய்க் குட்டி இறந்த சேதி கேட்டு
விமான பயணத்தை ரத்து செய்ததைச்
சொன்னது இன்னொரு நண்பன்
மகனின் தேர்ச்சி அட்டையில்
'தேர்வு என்பதே முட்டாள்தனமான ஒன்று'
என்று கையொப்பமிட்டதைச்
சொல்லி வருந்தினாள் மனைவி
எனக்கோ வேறு கவலை
மீன்களை அடைத்து வைத்திருக்கும்
இந்த மேசை மீன்தொட்டியை எப்படி உடைப்பது?
தி.அய்யப்பன் ( நன்றி : ஆனந்த விகடன் )
Labels: கவிதைகள்
யார்?
நேற்று யதேச்சையாக சமையல் அறையில் நுழைந்த போது அங்குள்ள பொருட்களை நோட்டமிட்டேன். எவ்வளவு சொகுசாக நாம் வீட்டில் சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பார்க்கும் போது ஈழ மக்களின் இடம் பெயரும் காட்சி கண்களில் இரத்தம் வரவழைக்கிறது.
எல்லாவற்றையும் இழந்து எந்த ஒன்றின் உந்துதலால், இடைவிடாத போராட்டத்தை இவர்கள் நடத்துகிறார்கள். உலகம் முழுதும் தடை, உணவு இல்லை, மருந்து இல்லை. எனினும் இயக்கம் தான் எல்லாம் இறுதி இலட்சியம் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறுகிறார்கள்.
பலர் பிரபாகரனை ஆதரிக்கிறார்கள் அதேபோல் எதிர்ப்பவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். முழுக்க எதிரிகளால் சூழப்பட்ட அந்த மனிதனின் எண்ண ஓட்டம் எண்ணவாக இருக்கும் இந்த கணத்தில். எண்னிப் பார்க்க பார்க்க இரவு தூக்கம் வர நெடு நேரமாகிறது.
மாலையில் பார்க்கில் ஜோடி ஜோடியாக இருப்பவர்களை பார்த்துக் கொண்டே வாக்கிங் சென்றபோது ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை எறிகணையாய் நெஞ்சில் பாய்கிறது.
ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு
குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு
பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது
இளையவருக்கு விதித்தவன் யாரோ?
Labels: கட்டுரைகள்
உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது
வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..
-ந. லக்ஷ்மி சாகம்பரி
Labels: கவிதைகள்
ஒரு அன்பரின் மின் மடல் வினவல்
நண்பர் சதீஸ் அவர்களுக்கு,உங்களது பதிவில் அறிமுகம் பகுதியில் இருந்து DRCET பற்றிய குறிப்பை எனது பதிவில் வெளியிட உங்களது அனுமதி தேவை.
அன்புடன்
வேளராசி.
எனது பதில் :
தாராளமாக நண்பரே.... எடுத்துக் கொள்ளுங்கள்.
உலகையே தன் வீரத்துக்கு அடிமையாக்கின மாவீரன் அலெக்சாண்டருக்கு 33 வயதிலேயே முடிவு வந்தது. தன் வாழ்வின் இறுதிக் கட்டம் என்று புரிந்து கொண்ட அந்த மாமன்னன் சொன்னான் " நகர வீதிகளில் என் பிணத்தை சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பெட்டியை மூடாமல் என் இரண்டு கைகளையும் விரித்து வைத்த நிலையில் எடுத்துச் செல்லுங்கள். உலகம் முழுவதையும் வெற்றி கொண்ட இந்த அலெக்சாண்டர், போகும்போது தன்னோடு எதையும் கொண்டு போகவில்லை என்பதை உலக மக்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு சித்தரின் கூற்றுப்படி, நம்மை தொடரப் போவது இதுதான்...
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியும் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடர்வது இருவினை புண்ணிய பாவமே.
‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்' என்று சமுதாயத்தின் பெரும்பாலோர் இருக்க, பொது வாழ்விற்கு நம்பிக்கை அளிக்கிறார்கள் ஆனந்த் பிரசாத்தும் கிருஷ்ணப்பிரியாவும், அவர்களின் சில நண்பர்களும்..
-----------------------------------------------------------------------
Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email : priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
URL : http://www.drcet.org/
Labels: கட்டுரைகள்